கொரோனா தொற்றால் ஊரே ஒதுக்கியது.. மாடியிலிருந்து குதித்து உயிரைவிட்ட கணவன், மனைவி

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் கணவன், மனைவியை ஊரார் ஒதுக்கி வைத்தனர். விரக்தியடைந்த இருவரும் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.


ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம், தர்மாவரம், தேரு பஜாரை சேர்ந்தவர் பனிராஜ் (வயது 36), இவரது மனைவி சிரிஷா (வயது 32). இவர்களுக்கு பாலாஜி (வயது 12) என்ற மகன் உள்ளான். வாய் பேச முடியாத பனிராஜ் வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.


கடந்த வாரம் பனிராஜின் தாயார் வரலட்சுமி கொரோனால் பாதிக்கப்பட்டு பலியானார். அடுத்து பனிராஜ், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மகன் பாலாஜியை தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கணவன், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தம்பதி தற்கொலை செய்த இடத்தில் போலீஸ், பொதுமக்கள் குவிந்தனர்.
தம்பதி தற்கொலை செய்த இடத்தில் போலீஸ், பொதுமக்கள் குவிந்தனர்.


கடந்த வெள்ளிக்கிழமை பனிராஜும் சிரிஷாவும் கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டுக்குத் திரும்பினார். ஆனால் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் யாருமே இவர்களிடம் பேசவில்லை. ஒட்டுமொத்த ஊரும் அவரை ஒதுக்கிவைத்தது. பனிராஜின் பெட்டிக் கடைக்கு ஒருவர்கூட வரவில்லை.


மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது வீட்டின் 3- வது மாடியிலிருந்து கீழே குதித்தனர். இதில் பனி குமார் அங்கேய உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.


கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் சமூக இடைவெளியை பலரும் மறந்து விடுகின்றனர். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைக்கும் சமூக புறக்கணிப்பை இம்மி பிசகாமல் கடைபிடிக்கின்றனர்.


கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பல குடும்பங்கள் விரக்தியின் விளிம்பில் தத்தளிக்கின்றன. அவர்களை சமூகம் புறக்கணித்தால் அவர்கள் துயரமான முடிவுகளை எடுக்க நேரிடும். நாம் நோயாடு போராட வேண்டும். நோயாளிகளோடு அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *