அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதன்காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனை செல்ல வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு அப்பல்லோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையங்களை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் கருவியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.