51 கொரோனா தடுப்பூசி சேமிப்பு நிலையங்கள்

தமிழகம் முழுவதும் 51 கொரோனா தடுப்பூசி சேமிப்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி புனேவின் செரம் இன்ஸ்டிடியூட் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் தங்களது கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு மொத்தமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கி, மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளது.  

கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

“தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசிகளுக்கான சேமிப்பு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் தரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *