ஸ்மார்ட்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் (பாலிமெரேசே செயின் ரியாக்சன்) பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் நடத்தப்படும் இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 4 மணி முதல் 8 மணி நேரமாகிறது. 

இந்நிலையில், ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய சோதனை முறையை அமெரிக்காவின் யு.சி.பெர்கிலே மற்றும் கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்து பெர்கிலே பயாஇன்ஜினீயரிங் பேராசிரியர் டேனியல் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

“சிஆர்ஐஎஸ்பிஆர்  முறையில் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு கருவியை உருவாக்கியுள்ளோம். மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை இந்த கருவியில் வைக்க வேண்டும். அந்த கருவியின் மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும். 

சளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி, கொரோனா வைரஸ் கிருமிகளை, ஒளிவில்லைகளாக மாற்றிக் காட்டும். ஸ்மார்ட்போன் கேமரா அந்த ஒளிவில்லைகளை பதிவு செய்யும்போது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவாக கண்டறிய முடியும். அவருக்கு எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நடைமுறை மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் துல்லியமாக முடிவை அறிந்து கொள்ள முடியும். எந்த வகையான ஸ்மார்ட்போனையும் பொருத்தும் வகையில் எங்களது கருவியை வடிவமைத்து உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *