கடந்த 3 மாதங்களில் முதல்முறையாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து கடந்த செப்டம்பரில் உச்சத்தை தொட்டது. அக்டோபர் தொடங்கியது முதல் தினசரி கொரோனா வைரஸ் தொற்று இறங்குமுகமாக உள்ளது.
இந்த வரிசையில் நேற்று 46,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூலை 28-ம் தேதி 47,703 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதன்பின் கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது தினசரி கொரோனா தொற்று 50,000-க்கு கீழாக குறைந்திருக்கிறது. இது முக்கிய மைல் கல் ஆகும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 75,97,063 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 67,33,328 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 69,720 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனைகளில் 7,48,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 88.63 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,15,197 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தேசிய அளவிலான உயிரிழப்பு 600-க்கும் கீழாக பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 5,984 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் கடந்த செப்டம்பரில் தினசரி கொரோனா தொற்று 25 ஆயிரம் வரை தொட்டது. தற்போது அங்கு புதிய தொற்று 6 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்திருக்கிறது. மாநிலத்தில் 16,01,365 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,84,879 பேர் குணமடைந்துள்ளனர். 1,74,246 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,240 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் புதிதாக 2.918 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,86,050 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,44,532 பேர் குணமடைந்துள்ளனர். 35,065 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,453 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 5,018 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,70,604 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,53,829 பேர் குணமடைந்துள்ளனர். 1,06,233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,542 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 1,719 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,56,865 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,18,685 பேர் குணமடைந்துள்ளனர். 31,495 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,685 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 6,591 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,53,472 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,60,243 பேர் குணமடைந்துள்ளனர். 91,922 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,206 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் இதர மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.