உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமையகமான ஜெனீவாவில் இன்று நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் 34 மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான் பேசியதாவது:
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகள், கிழக்கு மத்திய தரைகடல் நாடுகளில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. ஆப்பிரிக்கா, மேற்கு பசிபிக் நாடுகளில் நிலைமை பரவாயில்லை.
எங்களது கணிப்பின்படி உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அதாவது உலக மக்களில் 10 பேரில் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உள்ளது. இனிவரும் காலம் கடினமாக இருக்கக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலக மக்கள் தொகை 760 கோடி ஆகும். அதில் 10 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
அதன்படி சுமார் 76 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச நாடுகள் நாள்தோறும் வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 55 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உண்மையான வைரஸ் தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.