அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி…

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கேரளா, கர்நாடகாவை தவிர்த்து இதர மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தேசிய அளவில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 87.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

கடந்த 2 மாதங்களில் இல்லாத வகையில் தேசிய அளவிலான உயிரிழப்பு இன்று 680 ஆக குறைந்தது.

கரோனா தடுப்பூசிகள்

இதனிடையே, இந்தியாவில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ் டி’ ஆகிய கரோனா தடுப்பூசிகள் 3-ம் கட்ட பரிசோதனைக்கு முன்னேறியுள்ளன. 

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவி ஷீல்டு’ இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது, ரஷ்ய அரசு நிறுவனம் ‘ஸ்புட்னிக் வி’ என்ற பெயரில் கரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. 

இதில் 10 கோடி தடுப்பூசிகளை ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் மூலம் இந்தியாவில் விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  நாட்டின் 130 கோடி மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட மிகப்பெரிய உள்கட்டமைப்பு தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கி முன்னுரிமை அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. 

இதன்படி கரோனா நோயாளிகள், வைரஸ் தடுப்பில் ஈடுபட்டிருக்கும் முன்கள பணியாளர்கள், முதியோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது. அடுத்த ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேவையான உள்கட்டமைப்பு

மருந்துகள், தடுப்பூசிகளை சேமித்து வைக்க நாடு முழுவதும் தற்போது சுமார் 80 ஆயிரம் குளிர்சாதன கிடங்குகள் உள்ளன. கரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க தற்போதுள்ள குளிர்சாதன கிடங்குகளை போல 10 மடங்கு அதிக வசதியை உருவாக்க வேண்டும்.

மேலும் தடுப்பூசிகளை போடுவதற்கு கோடிக்கணக்கில் ஊசிகள் தேவை. இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஊசி தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஊசி தயாரிப்பு நிறுவனமான ‘இந்துஸ்தான் சிரின்ஜ்’ ஆண்டுக்கு 70 கோடி ஊசிகளை தயாரிக்கிறது. இதனை 100 கோடியாக அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசிகளை போட சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான செயல்திட்டத்தை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.

பிரதமர் தலைமையில் ஆலோசனை

இந்த பின்னணியில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள், கரோனா பரிசோதனைக்கான நவீன தொழில்நுட்பங்கள், நாட்டின் தற்போதைய கரோனா பரவல் நிலை ஆகியவை குறித்து டெல்லியில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய  சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், மூத்த விஞ்ஞானிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை போடுவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நிதி ஆயோக் குழு தயாரித்துள்ள செயல் திட்டத்தை பிரதமர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய உதவும் ‘செரோ’ பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

‘செரோ’  பரிசோதனை என்பது 25 பேரின் சளி மாதிரிகளை ஒரே நேரத்தில் சோதித்து அறிவதாகும். இதன்மூலம் தனிநபர் கரோனா தொற்றை உறுதி செய்ய முடியாது. எனினும் குறிப்பிட்ட பகுதியின் கரோனா வைரஸ் பரவல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும்.

ஆயுஷ் துறைக்கு பாராட்டு

பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:

கரோனா தடுப்பூசிகளை குறைந்த விலையில் வழங்க வேண்டும். குறைந்த கட்டணத்தில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பான ஆராய்ச்சி,, நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

இதன்மூலம் இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பலன் அடையும். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகள் பேரூதவியாக உள்ளன. இதற்கு நடவடிக்கை எடுத்த ஆயுஷ் துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து  கொள்கிறேன்.

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்திய நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *