அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க வரும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் தொடக்க நிலையில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதன்பின் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக அடுத்தடுத்து 5 முறை நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 7-வது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஊரடங்கு தொடங்கி இப்போது வரை கொரோனா வைரஸுக்கு எதிராக அனைத்து இந்தியர்களும் போரிட்டு வருகின்றனர். இதன் விளைவாக கடந்த ஏழு, எட்டு மாதங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருக்கிறது. உலகளாவிய அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சர்வதேச நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்பும் மிகவும் குறைவாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில்கூட கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்களின் உயிர்களைக் காப்பதில் இந்தியா திறம்பட செயல்பட்டு வருகிறது.  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 90 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. 

சுமார் 2,000 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் எண்ணிக்கை  படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 10  கோடியை தாண்ட உள்ளது. வைரஸ் பரவலை தடுப்பதில் நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், போலீஸார் சுயநலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அலட்சியம் வேண்டாம்

ஊரடங்கு முடிந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. கொரோனா வைரஸ் முழுமையாக ஓய்ந்துவிடவில்லை. அண்மைகாலமாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது ஒரு தரப்பினர் அலட்சியமாக இருப்பது தெரியவருகிறது. 

முகக்கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர். சமூக இடைவெளியை மறந்து நடமாடுகின்றனர். சிறு அலட்சியம்கூட உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடும். முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இதன்மூலம் உங்கள் குழந்தைகள், குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.

அமெரிக்கா, பிரேசில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தது. ஆனால் அந்த நாடுகளில் தற்போது திடீரென  வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.  இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

அனைவருக்கும் தடுப்பூசி

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை தயாரிப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சந்தையில் தடுப்பூசி அறிமுகமான பிறகு அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தீ, எதிரி, பாவம், தவறு, நோய் ஆகியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை வேரோடு அழிக்க வேண்டும். தடுப்பூசி விற்பனைக்கு வரும் வரை மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.       

நவராத்திரி, தசரா, ஈத், தீபாவளி, சத் பூஜை, குருநானக்  ஜெயந்தி ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நாம் இக்கட்டான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நமது சமுதாய கடமையை, பொறுப்பை மறந்துவிடக்கூடாது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். 6 அடி இடைவெளியை கண்டிப்புடன்  பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 

தீபாவளி வாழ்த்துகள் 

நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன்காரணமாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடிக்கடி நினைவுபடுத்துகிறேன். ஊடகங்களும் சமூக ஊடகங்களும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் ஊடகங்கள் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்.  நவராத்திரி, தசரா, ஈத், தீபாவளி, குருநானக் ஜெயந்தி, சாத் பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தது. நடப்பு அக்டோபரில் தினசரி கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று 50,000-க்கும் கீழாக வைரஸ் தொற்று குறைந்திருக்கிறது. 

எனினும் பண்டிகை காலம், குளிர்காலத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு அடுத்த சில மாதங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது 12 நிமிட உரையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *