அடுத்த வாரம் முதல் பிரிட்டிஷ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி

அடுத்த வாரம் முதல் பிரிட்டிஷ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

உலகம் முழுவதும் 6 கோடியே 50 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 51 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் ஒரு கோடியே 43 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

சர்வதேச கரோனா வைரஸ் பாதிப்பில் பிரிட்டன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 16 லட்சத்து 59 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் வைரஸ் பரவல் உச்சத்தை எட்டி குறைந்த நிலையில், அங்கு மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. 

பிரிட்டனின் மக்கள் தொகை 6.66 கோடியாகும். அந்த நாட்டில் தற்போது நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்ததால் கடந்த நவம்பர் தொடக்கத்தில் 2-ம் கட்ட ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன்காரணமாக 30 சதவீதம் அளவுக்கு வைரஸ் பரவல் குறைந்தது. இந்த ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. எனினும் பிரிட்டன் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்த பின்னணியில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து  அந்த நாட்டு சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் பேட்டியளித்தார்.

“உலகின் முதல் நாடாக பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பைசர் நிறுவனம் தனது பரிசோதனை குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அளித்துள்ளன.  அவை இன்னும் பரிசீலனை நிலையிலேயே உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதால் நாங்கள் துரிதமாக செயல்பட்டு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளோம். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலன் அளிக்கிறது. 

பைசர் நிறுவனத்திடம் இருந்து 4  கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். இதில் முதல்கட்டமாக 8 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் பிரிட்டனுக்கு வருகிறது. இது இருமுறை போட வேண்டிய தடுப்பூசியாகும். இதன்படி முன்னுரிமை அடிப்படையில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி முன்னுரிமைக்காக 9 வகையான பட்டியலை பிரிட்டிஷ் சுகாதாரத் துறை தயாரித்துள்ளது. இதன்படி முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், அங்கு பணியாற்றுவோருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். 2-ம் கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 75 வயது, 70 வயது, 65 வயது, 60 வயது என்று வயது வாரியாக 9 வகையான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

பைசர் நிறுவன தடுப்பூசியை மைனல் 70 டிகிரி செல்சியஸில் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்பதால் பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் சிறப்பு குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *