ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கப்பட்டது.
உலகளாவிய அளவில் ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 7 லட்சத்து 19 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 20 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வளரும் நாடுகளுக்கு போட்டியாக இந்தியாவில் அண்மையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து புதிய தடுப்பூசியை தயாரித்துள்ளன. இதற்கு கோவேக்ஸின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில், இந்திய கண்டுபிடிப்பான கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியது. இந்த தடுப்பூசி பரிசோதனை வெற்றியடைந்தால் உலகளாவிய அளவில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயரும். எனினும் புதிய தடுப்பூசி பல்வேறு கட்ட பரிசோதனைகளை தாண்டி வர்த்தகரீதியாக சந்தையில் அறிமுகமாக 15 மாதங்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது.