தேர்தல் நடைமுறையில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்

தேர்தல் நடைமுறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளும் பிரிட்டன், ரஷ்யாவின் தலா ஒரு கொரோனா தடுப்பூசியும் 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை மத்திய சுகாதாரத் துறை இப்போதே மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன கிடங்குகளின் வசதி அதிகரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை போடுவதற்கான ஊசிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

விரிவான செயல்திட்டம்

நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை போடுவது தொடர்பான விரிவான செயல்திட்டத்தை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகளின் அதிகாரிகளுடன் பலமுறை விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அண்மையில் கூறும்போது, “அடுத்த ஆண்டு ஜூலைக்குள் 25 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். முதல்கட்டமாக நோயாளிகள், முதியவர்கள், மருத்துவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசிகள், இருதடவை போட வேண்டிய தடுப்பூசிகளாகும்.  மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான ‘ஜைகோவ் டி’ கொரோனா தடுப்பூசி, 3 தடவை போட வேண்டிய தடுப்பூசியாகும்.   

செயலாக்க குழுக்கள்

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், “கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு தேவையான சுகாதார பணியாளர்களை தயார்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செயலாக்க குழுக்களை உருவாக்க வேண்டும். கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவ வாய்ப்புள்ளது. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய குளிர்சாதன கிடங்குகளில் கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து குக்கிராமங்கள் வரை தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும். நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஓராண்டு வரை ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறையில்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதே நடைமுறையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “தேர்தல் வாக்குச்சாவடிகள் போன்று அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் வார்டு வாரியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். எந்தெந்த பகுதிகளில் எப்போது தடுப்பூசி போடப்படும். எந்த நேரத்தில் மக்கள் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் செல்போன் எஸ்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தன.

இலவச தடுப்பூசி

உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் வரும் கொரோனா தடுப்பூசிகள் ரூ.450 முதல் ரூ.5,500 வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு குறைந்த விலையில் வழங்க உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதா அல்லது விலை நிர்ணயிப்பதா என்பதை முடிவு செய்யலாம்.  தமிழகம், மத்திய பிரதேசம், உத்தர  பிரதேச அரசுகள், தங்கள் மாநில மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *