அடுத்த ஆண்டு வரை கொரோனாவுக்கான மருந்து சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு அறுதியிட்டு கூறி வருகிறது.
எனினும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, அமெரிக்காவின் மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள்ளேயே கொரோனா மருந்தை வர்த்தகரீதியாக விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று மேலோட்டமாக உறுதி அளித்து வருகின்றன.

அந்த நிறுவனங்களின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்புகளை உன்னிப்பாக உற்று நோக்கினால், “மனித பரிசோதனை நல்லபடியாக நடந்தால்” என்று ஒரு இக்கன்னா வைக்கப்பட்டிருப்பதை தெளிவாக காண முடியும்.இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் செசினோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் வரும் செப்டம்பரில் உலக சந்தையில் எங்களது மருந்து கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு குண்டை தூக்கிப் போட்டனர். எங்களது ஆய்வு முடிவுகளை சைபர் தாக்குதல் மூலம் ரஷ்யா திருடியுள்ளது என்று அந்த பல்கலைக்கழகம் அலறியது.

இந்த களோபரத்துக்கு நடுவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த ‘கமலேயா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடாமலஜி அண்ட் மைக்ரோபயாலஜி’ நிறுவனம், அடுத்த 10 நாள்களில் கொரோனாவுக்கு சூப்பர் மருந்தை சந்தையில் அறிமுகம் செய்வோம் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.
அதாவது ஆகஸ்ட் 10 முதல் 12-ம் தேதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி தருவோம் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. இந்த செய்தியை ரஷ்ய அரசு ஊடகமான ‘டாஸ்’ வெளியிட்டிருக்கிறது.
‘உயிர்க்கொல்லி கொரோனாவுக்கு யார் மருந்து கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சிதான். ஆனால் ரஷ்ய நிறுவனத்தின் சொல்லை நம்ப முடியுமா, அந்த மருந்து பாதுகாப்பானதா, உலகம் முழுவதும் மருந்து கிடைக்குமா’ என அடுக்கடுக்கான கேள்விகளை விஞ்ஞானிகளும் நெட்டிசன்களும் எழுப்புகின்றனர். இதற்கு ஆகஸ்ட் 10-ம் தேதி பதில் கிடைக்கலாம் அல்லது மருந்து நமத்து புஸ்வாணமாகலாம்.