3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு உறுதி

அடுத்த 3 மாதங்களில் தொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 150 கரோனா தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ் டி’  ஆகிய உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகள் 2, 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. 

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது. செரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவுக்கும் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. 

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை பரிசோதனை செய்து உற்பத்தி செய்யவும் செரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

ரஷ்ய அரசு நிறுவனம் தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் பரிசோதித்து வருகிறது. முதல்கட்டமாக 10 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. 

அமெரிக்காவின் மாடர்னா, பைசர் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பரிசோதித்து, உற்பத்தி செய்வது தொடர்பாகவும் அந்த நிறுவனங்களுடன் இந்திய தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் காணொலி வாயிலான கருத்தரங்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று பங்கேற்று பேசினார்.

“இந்தியாவில் அடுத்த 3 மாதங்கள் அல்லது 4 மாதங்களில் கரோநா தடுப்பூசி தயாராகிவிடும். யாருக்கு முதலில் தடுப்பூசி போடுவது என்பது அறிவியல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். சுகாதார துறை ஊழியர்கள், கரோனா முன்கள பணியாளர்கள், முதியவர்கள், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

தடுப்பூசி போடுவது தொடர்பாக விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் 2021-ம் ஆண்டு அனைவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக அமையும்” என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *