கொரோனா குடும்பத்தில் குடுமிப்பிடி சண்டை.. இந்தியாவில் ஆட்டம் போடுவது ஏ2ஏ வைரஸாம்

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூனில் இருந்தே வூஹானில் கொரோனா வைரஸ் பரவி வந்திருக்கக்கூடும் என்று உயிரியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


சீனாவின் அதிரடி நடவடிக்கைகளால் வூஹானில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் இதர பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதும் தடுக்கப்பட்டது. ஆனால் உலகமயமாக்கலின் விளைவாக சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு விசா இன்றி கொரோனா விமானம் ஏறி சென்றது. வைரஸின் கொட்டத்தை சீனா அடக்கிவிட்டபோதிலும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா வைரஸ் பிடியில் சிக்கிக் கொண்டன.

கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ச வர்தன் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்.
கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ச வர்தன் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்.


இதில் ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. அமெரிக்கா மட்டும் வைரஸின் கோரப்பிடியில் சிக்கித் பரிதவித்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து பிரேசில், இந்தியாவில் கொரோனாவின் ஆட்டம் அதிகமாக உள்ளது.


கடந்த 2003-ல் சீனாவில் சார்ஸ் ஆகவும், கடந்த 2012-ல் சவூதி அரேபியாவில் மெர்ஸ் என்ற பெயரிலும் கொரோனாவின் மூதாதையர்கள் சில மாதங்கள் தலைவிரித்து ஆடிவிட்டு மறைந்தன.

தற்போது பரவி வரும் ‘கோவிட் 19’ என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கொரோனோ குடும்பத்தின் 7-வது வகையாகும். இதுவும் சில மாதங்களில் காணாமல் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கோரத்தாண்டவமாடி வருகிறது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகர ரயில் நிலையத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகர ரயில் நிலையத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.


கொரோனா வைரஸை பொறுத்தவரை 15 நாள்களுக்கு ஒருமுறை அவை திடீர் மாற்றம் அடைகின்றன. ஒவ்வொரு மாற்றமும் கொரோனா குடும்பத்தின் புது வகை வைரஸாக கருதப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் தற்போது 100 வகையான கொரோனா வைரஸ்கள் (கோவிட் 19 பிரிவுகள்) கண்டறியப்பட்டுள்ளன.


இந்தியாவில் ஏ2ஏ, ஏ3, பி, பி4, டி614ஜி, 19ஏ, 19பி உள்ளிட்ட வகை கொரோனா வைரஸ்கள் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை விரிவான ஆய்வு நடத்தி மத்திய சுகாதாரத் துறையிடம் ஆய்வறிக்கை அளித்துள்ளது.


அதில் ஏ2ஏ வகை கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகம் காணப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் வேகமாகப் பரவிய டி614ஜி கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது. இந்த வகை வைரஸ்தான் டெல்லியில் அதிகமாகப் பரவியதாம். தற்போது டெல்லியில் புதிய வைரஸ் தொற்று குறைந்து வருவதற்கு இதுவும் மிக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸின் ரோஸி நகர விமான நிலையத்தில் பயணிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பிரான்ஸின் ரோஸி நகர விமான நிலையத்தில் பயணிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.


சமானிய மக்களின் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களை தொற்றுவதில் கொரோனா குடும்ப வைரஸ் கிருமிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெறுகிறது. இதில் குறிப்பிட்ட வகை வைரஸ் ஆதிக்கம் பெறுகிறது. அந்த வைரஸ் வியாபித்து பரவுகிறது. மற்றவை அழிகின்றன.


இந்தியாவில் ஏ2ஏ வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வைரஸ் தடுப்பு பணியில் முக்கிய மைல் கல் என்று வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ப மத்திய சுகாதாரத் துறை வியூகங்களை வகுக்கும். புதிய மருந்து ஆராய்ச்சிகள் நடைபெறும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *