கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு? மத்திய அமைச்சர் பதில்

சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
“இந்தியாவில் ஒன்றல்ல, இரண்டு அல்ல, 3 கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.

அவை வெவ்வேறு பரிசோதனை நிலைகளில் உள்ளன. அவற்றுக்கு விஞ்ஞானிகள் ஒப்புதல் கிடைத்தவுடன் பெரிய அளவில் தயாரித்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வோம்.

கொரோனா மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம், குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இவை தவிர ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்தை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் பரிசோதித்து வருகிறது.

இந்த 3 நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறும்போது, “முதலில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். இதன்பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் கூறும்போது, “கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் கொள்முதல் செய்ய தேவையில்லை.

மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *