ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியபோது சுகாதாரத் துறை செயலாளராக பீலா ராஜேஷ் இருந்தார். ஆரம்பத்தில் அவரது செயல்பாடுகள் வரவேற்பை பெற்றன. சமூக வலைதளங்களில் அவரைப் போலவே உடையணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. வீடியோக்கள் வெளியாகின.
எனினும் தமிழகத்தில் வைரஸ் தொற்று அதிகமானதால் அவரது செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பீலா ராஜேஷ் வணிக வரித் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த பின்னணியில் பீலா ராஜேஷ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக சமூக ஆர்வலர் செந்தில் புகார் அளித்துள்ளார். கொட்டிவாக்கம் தனி வீடு, நெற்குன்ற வீடு உள்ளிட்ட சொத்துகள், தையூரில் உள்ள 3.98 ஏக்கர் நிலம் சொத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக செந்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் காவல் துறை ஏடிஜிபியாக உள்ளார். பீலா ராஜேஷின் தந்தை வெங்கசேசன் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பீலா ராஜேஷின் தாயார் ராணி வெங்கடேசன் கடந்த 2006-ம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார்