மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம், பான்வல் நகரில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 40 வயது பெண் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவரது அறைக்கு நேற்று 25 வயது மதிக்கத்தக்க நபர் சென்றார். தன்னை டாக்டர் என்று அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டார். உடலில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அந்த பெண் உடல் அசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதற்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறிய மர்ம நபர், அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து மசாஜ் செய்துள்ளார். டாக்டர் என்பதால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இறுதியில் வலுக்கட்டாயமாக அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து இன்று காலை முகாம் நிர்வாகிகளிடம் அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி போலீஸில் புகார் செய்யப்பட்டது.
போலீஸார் விசாரணை நடத்தியபோது, அதே தனிமை முகாமில் ஆண்கள் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சுபம் கட்சு என்பவர், டாக்டர் என்ற போர்வையில் பெண் கரோனா நோயாளியை பலாத்காரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவாளி சுபம் கட்சு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமானவுடன் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர். அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமை முகாமில் இருந்து அவர் தப்பிச் செல்ல முடியாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.