கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மார்ச்சில் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதித்து, உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் சுரேஷ் ஜாதவ் கூறியிருப்பதாவது:
எங்களது ‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சந்தையில் விற்பனைக்கு வர திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்பாகவே தடுப்பூசிகளை தயாரிக்க தொடங்கிவிட்டோம். வரும் டிசம்பருக்குள் 20 கோடி முதல் 30 கோடி வரையிலான தடுப்பூசிகளை தயாரித்துவிடுவோம்.
எங்களால் ஒரு மாதத்தில் 6 கோடி முதல் 7 கோடி கரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். இந்த எண்ணிக்கையைவிட அதிக தடுப்பூசிகளை எங்களால் தயாரிக்க முடியும். எனினும் அதற்கு காலஅவகாசம் தேவைப்படும்.
தற்போது நாங்கள் 3-ம் கட்ட பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். இந்த முடிவுகள் வரும் டிசம்பர் 2-வது வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதே மாதத்தில் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகளை மத்திய சுகாதாரத் துறையின் மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) சமர்ப்பிப்போம்.
டிசிஜிஐ திருப்தி அடைந்தால் ஒரு மாதத்துக்கான அவசர கால உரிமத்தை வழங்கும். அதன்பிறகு உலக சுகாதார அமைப்பிடம் முழுவிவரங்களை சமர்ப்பித்து அனுமதி கோருவோம்.
இப்போதுவரை எங்களது தடுப்பூசி பரிசோதனை மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனினும் ‘கோவி ஷீல்டு’ தடுப்பூசி எவ்வளவு காலத்துக்கு மனிதர்களுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்பதை பரிசோதிக்க சில ஆண்டுகள் தேவைப்படும்.
அதாவது தடுப்பூசி போடப்பட்ட நபர்களை 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து பரிசோதித்தால் மட்டுமே இதனை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.