ஆவடியில் மக்களின் உயிரை காப்பாற்றிய பசுக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளன.
ஆவடி மாநகராட்சி 18-வது வார்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பூங்கா தெருவில் கடந்த 31-ம் தேதி ஒரு பசு இறந்து கிடந்தது. அதே பகுதியை கடந்து சென்ற மற்றொரு பசுவும் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தது.
அக்கம்பக்கத்தினர் ஆய்வு செய்தபோது தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்வது தெரியவந்தது. இங்கு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க பதிக்கப்பட்ட தரைவழி மின் வடம் சேதமடைந்து சாலைக்கு மேல் வந்துள்ளது. இதன்காரணமாக மின்கசிவு ஏற்பட்டு பசுக்கள் உயிரிழந்துள்ளன.
மின்சாரம் பாய்ந்து பசுக்கள் உயிரிழந்ததால் பகுதிவாழ் மக்கள் உஷாராகி உயிர் தப்பியுள்ளனர். மக்களுக்காக பசுக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளன என்று மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.