இது எல்லை மீறிய காதல் – 1200 கி.மீ பயணம்… ஒன்றரை கி.மீ கடந்திருந்தால் அவ்வளவுதான்

இந்தியா எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குச் செல்ல இன்னும் ஒன்றரை கி.மீட்டர் தூரம் மட்டும் மிச்சமிருந்தது. பாகிஸ்தான் காதலியை சந்திக்கும் ஆவலில் இருந்த மகாராஷ்டிரா மாநில இளைஞரை எல்லைப்பாதுகாப்பு படை போலீசார் மடக்கினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது சித்திக்இ தன்னுடைய மகன் சித்திக் முகமது ஜிஷானைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சித்திக் முகமது ஜிஷானை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அவனின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் சித்திக் முகமது ஜிஷானுக்கு பாகிஸ்தானில் காதலி இருப்பதாகவும் அவளைச் சந்திக்க செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

செல்போன் சிக்னல்

இதையடுத்து சித்திக் முகமதுவின் செல்போனின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நண்பர்கள் கூறியது உறுதியானது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையோர பகுதியான டொலவிரா கிராம பகுதியில் சிக்னல் காட்டியது. உடனே மகாராஷ்டிரா மாநில போலீசார், சித்திக் முகமதுவின் செல்போன் சிக்னல் அடிப்படையில் குஜராத் மாநில எல்லைபாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். செல்போன் சிக்னல் அடிப்படையில் சித்திக் முகமதுவை தேடினர். அப்போது சித்திக் முகமதுவின் திட்டம் குறித்த தகவலும் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. குஜராத்தின் ரன் ஆஃப் கட்ச் வழியாக அவர் பாகிஸ்தானுக்குள் செல்ல திட்டமிட்டிருந்தார். எல்லை பகுதியை நெருங்கும் முன்பு, அவர் விட்டுச்சென்ற அவரது பைக்கை பாசில் பார்க் என்னுமிடத்தில் கண்டுபிடித்தனர்.

சுயநினைவு இழந்தார்

பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. அதனால் சித்திக் முகமது, காதலியை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆசையில் பாகிஸ்தான் எல்லையைக் கடக்க சென்றுக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தச் சோக சம்பவம் நடந்தது. ஏனெனில் ரன் ஆஃப் கட்ச் பகுதி வறட்சியானது. நீண்ட தூரம் சென்றதால் சித்திக் முகமது மிகவும் சோர்வடைந்தார். அதனால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சுய நினைவு இழந்தார். அதனால் அங்கேயே சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் கிடந்துள்ளார். அது எல்லைபாதுகாப்பு படையினருக்கு (பி.எஸ்.எப் வீரர்களுக்கு) சாதகமானது.

மயங்கி கிடந்த சித்திக் முகமதுவைக் கண்டுபிடித்த பிஎஸ்எப் வீரர்கள், அவரை தங்களின் முகாமிற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். மயக்கம் தெளிந்த சித்திக் முகமது, வழக்கம் போல நான் எங்கு இருக்கிறேன் என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பிஎஸ்எப் வீரர்கள் உன் பெயர் சித்திக் முகமதுதானே, நீ உன் பாகிஸ்தானில் உள்ள காதலியைச் சந்திக்கத்தானே இங்கு வந்தாய் என்று கூறியுள்ளனர்.

பேஸ்புக் காதல்

தன்னுடைய முழு ஜாதகமும் பிஎஸ்எப் வீரர்களுக்கு தெரிந்ததால் சித்திக் முகமது அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், பிஎஸ்எப் வீரர்களிடம் தன்னுடைய லவ் ஸ்டோரியைக் கூறியுள்ளார். காதலியைச் சந்திக்க 1,200 கி.மீ பயணம் செய்து வந்திருப்பதாகவும் என்னை பாகிஸ்தான் செல்ல அனுமதியுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதற்கு பிஎஸ்எப் வீரர்கள், அனுமதியில்லாமல் அங்கு நீ செல்ல முடியாது. அதையும் மீறி சென்றால் காதலியைப் பார்க்க முடியாது சிறைக்குத்தான் செல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து சித்திக் முகமது, ஃபேஸ்புக் மூலமாதத்தான் சம்ரா எனக்கு அறிமுகமாகினாள். இருவரும் எல்லைகடந்திருந்தாலும் எங்கள் இதயங்கள் ஒன்றாகின. அவள் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் எனும் இடத்தில் வசித்து வருகிறாள் என்று கூறினார். கூகுள் மேப் உதவியினால் இங்கு வந்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து பிஎஸ்எப் வீரர்கள், 2012-ம் ஆண்டு இதேபோன்று ஒரு வாலிபர் பாகிஸ்தானுக்கு எல்லையை கடந்து சென்றார். அங்கு அவரை பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்து ஆறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் விடுதலை செய்தனர் என்று தெரிவித்து சித்திக் முகமதுவை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *