`கணவரின் காதல் ரகசியங்கள்; உயிரைப் பறித்த 41 நிமிட போன் உரையாடல்’

கணவரின் காதல் ரகசியங்களைத் தெரிந்து கொண்ட மனைவி, தற்கொலை செய்துகொண்டார். அதனால் அவரின் ஒரு வயது மகன் அநாதையாகியுள்ளான்.

தற்கொலை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(28). இவரின் மனைவி ஷோபனா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன. ஒரு மகன் உள்ளான்.

விஜயகுமார், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதனால் திருமணத்தின்போது ஷோபனாவுக்கு அவரின் குடும்பத்தினர் விஜயகுமாரின் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை குறைவில்லாமல் கொடுத்துள்ளனர்.

வரதட்சணை

ஷோபனாவிடம் அவரின் மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷோபனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 வீடியோ

இதற்கிடையே ஷோபனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்போனில் 2 வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு வீடியோவில் `கணவர் குடும்பத்தினர், என்னிடம் வரதட்சணை கேட்டு மாமனார்-மாமியார் துன்புறுத்துவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தான் இறந்த பிறகு தனது மகனுக்கே அனைத்து சொத்தும் சேர வேண்டும்,

நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கியது போல் எனது மகனையும் வளர்த்து ஆளாக்குங்கள் அம்மா’ என உருக்கமாக பேசியுள்ளார்.

காதல் ரகசியங்கள்

இன்னொரு வீடியோவில் `கணவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் உள்ளது. அதை மறைக்க வரதட்சணை கேட்டு, கணவர், மாமனார், மாமியார் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர்.

என்னை தற்கொலைக்கு துாண்டிய அவர்களை, சும்மா விடாதீர்கள்.’என் மகனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். என் உடல் உறுப்புகளை தானம் செய்து, அப்பா சமாதி அருகே புதைத்து விடுங்கள்’ என்று கூறுகிறார்.

41 நிமிடங்கள்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் விஜயகுமார் பணியாற்றிவந்துள்ளார். சென்னையில் விஜயகுமாரும் ஊரில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் குடியிருந்துள்ளனர்.

விஜயகுமாருக்கு நிறைய ப்ரெணட்ஸ்கள் இருந்துள்ளனர். ஊரடங்கால் சொந்த ஊருக்கு விஜயகுமார் சென்றுள்ளார். அப்போது அவரின் செல்போனுக்கு ஒர் அழைப்பு வந்துள்ளது. அதை ஷோபனா எடுத்து பேசியுள்ளார்.

அப்போது ஷோபனாவுக்கும் எதிர்முனையில் பேசிய பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் எதிர்முனையில் பேசிய பெண், தான் யாரென்றும் தனக்கும் விஜயகுமாருக்கும் உள்ள நட்பு குறித்து 41 நிமிடங்கள் பேசியுள்ளார். அதைக்கேட்டு ஷோபனா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து கணவரிடம் கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வரதட்சணை கொடுமை, கணவரின் சுயரூபம் தெரிந்ததும் மனவேதனையில் ஷோபனா தன்னுடைய மரண வாக்குமூலமாக 2 வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்துவருகிறது. ஆர்டிஓ அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

உடல் உறுப்பு தானம்

ஷோபனாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் விஜயகுமார், மாமனார் அன்பழகன், மாமியார் செல்வராணி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷோபனாவின் உடல் நீண்ட நேரத்திற்கு பிறகே மீட்கப்பட்டதால், அவரது விருப்பப்படி, உடல் உறுப்புகளை தானம் வழங்க முடிய வில்லை.

பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல், நீடாமங்கலத்தில் உள்ள அவரது தந்தையின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஷோபனா பேசிய வீடியோக்கள், ஆடியோக்கள் கல்மனைதையும் கரைக்கும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *