தமிழகத்தில் நாளை மறுநாள் அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தீவிர புயலாக உருமாறி நாளை மறுநாள் அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது.
நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தாமதமானால் புதுவை- சென்னை இடையே கரையை கடக்கும். ஒரு வேளை தாமதம் இல்லாமல் கரையை கடந்தால் காரைக்கால் – கடலூர் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால், மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் நாளை பலத்த காற்று வீசும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.