புயல் நாளை மாலை கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கிறது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“தென்மேற்கு, தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமை புயலாக மாறியது.

இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும்.

புதன்கிழமை மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே அதிதீவிர புயல் கரையைக் கடக்கும். அப்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால்,

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும்” என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *