தலித் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த அவலம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தெற்கு திட்டை ஊராட்சி. இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி பதவி வகித்து வருகிறார்.
துணைத் தலைவராக மோகன்ராஜ் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கடந்த ஜூலையில் நடந்த கூட்டத்தில் தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக புவனகிரி போலீஸார், ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, அவரது கணவர் சரவணனிடம் இன்று விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகிய இருவர் மீதும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் எழுதி பெறப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், பதவி ஏற்ற நாளில் இருந்து தன்னை கீழே அமர வைப்பதாகவும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து துணைத்தலைவர் ஏற்றியதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே ஊராட்சி செயலர் பொறுப்பு வகித்து வந்த சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து ஊராட்சி வளர்ச்சித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.