கிரெடிட் கார்டில் ரூ.10 லட்சம் மோசடி

கிரெடிட் கார்டில் ரூ.10 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகலிவாக்கம் சிவகாமி நகரை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 54). இவர் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்தார். 

அண்மையில் அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியிலிருந்து பேசுவதாக கூறினார்.

இருதய ராஜின் கிரெடிட் கார்டு காலம் முடிந்துவிட்டதாகவும் புதிய கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கான விவரங்களை இருதய ராஜிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 

சில நாட்களில் இருதய ராஜின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாக எஸ்எம்எஸ்கள் வந்தன. இதுகுறித்து அவர் மாங்காடு போலீஸார், அம்பத்தூர் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். 

போலீஸார் தீவிர விசாரணை நடத்தி தனியார் வங்கியின் வடபழனி கிளையில் பணியாற்றும் கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் அம்பத்தூர் சைபர் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இருதயராஜிடம் செல்போனில் பேசிய கார்த்திகேயன் முதலில் அவரது பழைய கிரெடிட் கார்டை முடக்கி புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். 

புதிய கார்டை கூரியரில் அனுப்பியபோது இருதய ராஜின் வீடு அருகே நின்று கொண்டு வீட்டு உரிமையாளர் போல நடித்தை கூரியர் பார்சலை பெற்றுக் கொண்டார். 

கூரியர் கொண்டு வந்த நபருக்கு தாராளமாக டிப்ஸ் வழங்கியுள்ளார்.

இதன்பின் இருதயராஜை செல்போனில் தொடர்பு கொண்டு கார்டின் ரகசிய எண்ணை பெற்றுள்ளார். 

இதன்பிறகு புதிய கிரெடிட் கார்டில் ரூ.10.36 லட்சத்துக்கு பொருட்களை வாங்கி குவித்துள்ளார். போலீஸாரின் கிடுக்குப்பிடியில் சிக்கி இப்போது அவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *