தீபாவளிக்கு 14,757 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மூத்த அதிகாரிகளுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
“தீபாவளியை ஒட்டி நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் 14,757 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 15, 16, 17, 18-ம் தேதிகளில் 16,026 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு பஸ்ஸில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படும்.
சென்னையில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 10, சானடோரியம் பஸ் நிலையத்தில் 2, பூந்தமல்லியில் 1 என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். செங்குன்றம் வழியாக பொன்னெரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பஸ்கள் கே.கே. பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி செல்லும் பஸ்கல் தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
நாகை, மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், கோவை செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து புறப்படும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.