கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் இவரது வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. சுனிதா வந்து கதவை திறந்தார். அப்போது பைக்கில் வெளியே நின்றிருந்த இருவர், அட்ரஸ் விசாரித்தனர். பின்னர் தாகத்தை தணிக்க தண்ணீர் கேட்டனர்.
அனிதா தண்ணீர் கொண்டு வர வீட்டுக்குள் சென்றபோது, வாசலில் நின்று கொண்டிருந்த அவரது 4 வயது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு இருவரும் பைக்கில் தப்பியோட முயன்றனர். ஒருவர் பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக இருக்க மற்றொருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு பைக்கின் பின்னால் அமர்ந்தார்.
இதை பார்த்த அனிதா பதறியடித்து தெருவுக்கு ஓடி வந்தார். பத்ரகாளியாக மாறி கயவர்களை தாக்கினார். அவர்களிடம் இருந்து குழந்தையை இழுத்து மீட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் இருவரும் பைக்கில் தப்பியோடினர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து, குழந்தையை கடத்த முயன்ற 2 பேரையும் கைது செய்தனர். இந்த கடத்தலின் பின்னணியில் குழந்தையின் சித்தப்பா இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளார்.
குழந்தையை கடத்தி பெற்றோரிடம் இருந்து ரூ.35 லட்சத்தை பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.