நான் கொலை செய்யப்படலாம்…கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற டெல்லி நிருபரின் மரணத்தில் மர்மம்

கொலை செய்யப்படலாம் என்று சமூக வலைதளத்தில் அச்சத்தை வெளிப்படுத்திய டெல்லி நிருபர் கொரோனா வார்டில் உயிரிழந்தார். அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செல்போன் பறிப்பு


டெல்லியை சேர்ந்தவர் தருண் சிசோடியா (வயது 37). இவர் முன்னணி இந்தி நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்தார். தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகளை அதிகமாக சேகரித்து வந்தார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.


டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து கொண்டே அந்த மருத்துவமனையின் குறைபாடுகளை சுட்டிக் காட்டி நாளிதழில் எழுதி வந்தார்.இந்த தகவல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கவனத்துக்கும் சென்றது. இதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், தருண் சிசோடியாவின் செல்போனை பறித்தது.

நிருபரின் அச்சம்


சமூக வலைதளத்தில் அதிக ஆர்வம் கொண்ட தருண் சிசோடியா, டெல்லி எய்எம்ஸ் மருத்துவமனை அவலத்தை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ் அப்பில், ‘நான் கொலை செய்யப்படலாம் என்று அஞ்சுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தருண் சிசோடியா எய்ம்ஸ் மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சக நிருபர்களும் நெருங்கிய நண்பர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாட்ஸ்அப் பதிவு ஆதாரம்


“தருண் சிசோடியோ 37 வயது இளைஞர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டார். அவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது” என்று சக நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு ஆதாரமாக “நான் கொலை செய்யப்படலாம்” என்ற தருண் சிசோடியாவின் வாட்ஸ் அப் பதிவையும் சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *