உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் பாமக வேட்பாளர் யார் ?

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ம.க வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலி போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை குறி வைத்திருந்தது. இந்தத் தொகுதியில் நடிகை குஷ்பூ போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் அ.தி.மு.க கூட்டணியில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் பா.ஜ.க-வினர் அதிருப்தியடைந்தனர். இந்தநிலையில் பா.ஜ.க -வுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் நடிகை குஷ்பூ போட்டியிடுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ம.க வேட்பாளரும் தொழிலதிபருமான ஏ.வி.ஏ கசாலி களமிறங்கியிருக்கிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசி பெறும் வேட்பாளர் கசாலி, அருகில் ஜெ.எம்.பஷீர்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசி பெறும் வேட்பாளர் கசாலி, அருகில் ஜெ.எம்.பஷீர்

யார் இந்த ஏ.வி.ஏ கசாலி?

தொழிலதிபர் ஏ.வி.ஏ கசாலி, பா.ம.க-வில் மாநில துணை தலைவராக உள்ளார். இவர் டெக்ஸ்டைல்ஸ், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர். சென்னை தேனாம்பேட்டையில் குடியிருந்து வருகிறார். ஜக்கிய ஜமாத்தின் மாநில பொருளாளராக 1994-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்பை இழந்தார். அதனால் இந்தத் தொகுதியில் ஏ.வி.ஏ கசாலி அறிமுகம் தேவையில்லை.

இந்தத் தொகுதியில் 2016-ல் தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நூர்ஜகான், வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தத் தடவை அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க. உள்ளது, வேட்பாளர் ஏ.வி.ஏ கசாலிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பா.ம.க வேட்பாளர் கசாலி
வேட்பாளர் கசாலி

தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள வேட்பாளர் ஏ.வி.ஏ. கசாலிக்கு உறுதுணையாக அ.தி.மு.க சிறுபான்மை நலப்பிரிவின் துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் மற்றும் அ.தி.மு.க.வினர் இருந்து வருகின்றனர். ஜமாத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் வேட்பாளர் கசாலி, சந்தித்து ஆசி பெற்றார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அந்த உற்சாகத்தில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளைக் கூறி வேட்பாளர் கசாலி, வாக்குகளை சேகரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *