கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றார்.
2007-ல் டி20, 2011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013-ல் சான்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை அவர் வென்று கொடுத்தார்.
கடந்த 2014-ல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் 2017-ல் ஒரு நாள் போட்டி கேப்டன்சி பதவியில் இருந்தும் விலகினார். கடந்த 2014-ல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓ்யவை அறிவித்தார்.

எனினும் ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.
கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வந்த மகேந்திர சிங் தோனி (வயது 39) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.
வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தோனி பங்கேற்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட உள்ளார்.
தனது ஓய்வை தோனி முன்கூட்டியே கணித்து எதிர்காலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதியே ‘தோனி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை தோனி தொடங்கிவிட்டார்.
இதன் இயக்குநர்களாக தோனியின் மனைவி சாக்சி, சுராஜ் சிங் உள்ளனர்.உலகின் மிகப்பெரிய ஓடிடி, டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான பானிஜியுடன் வணிகரீதியாக தோனி கைகோத்துள்ளார்.
வர்த்தகரீதியாக டிஸ்னி பிளஸ், ஹாட் ஸ்டாருடன் அவர் இணைந்து செயல்படுகிறார்.
மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் அதானி கட்டிடத்தில் தனது அலுவலகத்தை தோனி தொடங்கியிருக்கிறார். புதிய நிறுவனத்துக்கான லோகாவை அழகாக வடிவமைத்துள்ளார்.

2 கிரிக்கெட் பந்துகள், நடுவில் மட்டை, அதற்கு கீழே 3 ஸ்டெம்புகள் என்று லோகோ கண்ணை கவர்கிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி விலகினாலும் கிரிக்கெட் களத்தில் இருந்து அவர் விலகவில்லை.
கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை அவரது நிறுவனம் தயாரிக்க உள்ளது.
மைதானத்தில் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி, வணிகத்தில் கோடிகளை குவிப்பாரா என்பதை காலம்தான் கணிக்கும்.