“பெருமையா இருக்கு..!” -ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்த ஐபிஎஸ் அதிகாரியின் பெற்றோர்

தினேஷ்குமார் ஐபிஎஸ்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே வை சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் தினேஷ்குமார் தலைமையிலான போலீஸ் டீம் என்கவுன்ட்டர் செய்தது. தினேஷ்குமாரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள லக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னதண்டா கிராமம்.

இவரின் தந்தை பிரபு (63), விவசாயி. தாயார் சுபத்ரா (54). இவர்களின் ஒரே மகன்தான் தினேஷ்குமார். 34 வயதாகும் இவர், தன்னுடைய பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளி, சேலம் வித்யா மந்திர், ஈங்கூர் கங்கா மெட்ரிக் பள்ளிகளில் பயின்றார். பின்னர் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்துவிட்டு தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.

ரவுடி விகாஸ் துபே

2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற அவர், கான்பூர் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவருக்கு ரம்யா (29) என்ற மனைவியும், அனுஷ் கார்த்திக் (2) என்ற மகனும் உள்ளனர். போலீசாரை சுட்டு கொன்றுவிட்டு சிம்மசொப்பணமாக திகழ்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்து தமிழகத்துக்கு பெருமையைத் தேடிதந்துள்ளார் தினேஷ்குமார் ஐபிஎஸ்.

தினேஷ்குமாரின் தந்தை பிரபு, “விவசாயம் செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் அவனைப் படிக்க வைத்தேன். எங்களது மலைக்கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால், தினேஷ்குமார், விடுதியில் தங்கி படித்தான். சிறு வயது முதல் எந்த விஷயத்திலும் நேர்மையாக இருப்பான்.

தினேஷ்குமாரின் பெற்றோர்

நேர்மை

அவனுக்கு போலீஸ் வேலை என்றால் ரொம்ப பிடிக்கும். அதுதான் அவனுடைய லட்சியமாக இருந்தது. போலீஸ் வேலை கிடைத்ததும் நேர்மையாக இருப்பேன் என்று கூறி விட்டு சென்றான். பிரபல ரவுடியை அவன் சுட்டுக்கொன்றது தமிழகத்துக்கும், அவன் பிறந்த கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது” என்றார்.

தினேஷ்குமாரின் அம்மா சுபத்ரா “அவனுக்கு போலீஸ் வேலை என்பதால் எங்களை வந்து பார்ப்பதற்கு கூட நேரம் கிடைப்பது இல்லை. விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது வீடே சந்தோஷத்தில் திளைக்கும். எப்போதும் சவாலான வேலைகளை கையில் எடுக்கும் பணி அவனுக்கு சிறுவயது முதலே இருந்தது. தற்போது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு பிரபல ரவுடியை சுட்டு வீழ்த்தியது பெருமையாக இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *