அரிவாள், கத்தி வாங்கணுமா – டிஸ்ஆர்ம் ஆபரேஷனுக்குப்பிறகு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடர்ந்து நடந்த கொலைச் சம்பவங்களுக்குப்பிறகு கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆபரேஷன் டிஸ்ஆர்ம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 3325 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1110 கத்திகள் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை தயார் செய்யும் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுடன் போலீஸார் ஆலோசனை நடத்தினர். இதற்காக தமிழகம் முழுவதும் நடந்த 579 கூட்டங்களில் 2548 பேர் கலந்துக் கொண்டனர்.

அதன்தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும் இதுபோன்ற ஆயுதங்கள் தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்.பிக்களுக்கும் ஒர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதில், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர் எந்த காரணத்துக்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது. சிசிடிவி கேமராக்களை கடை, பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல் துறை உதவி செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மேற்கண்ட அறிவுரைகளை செயலாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிபியின் இந்த அதிரடி உத்தரவால் தமிழகத்தில் அரிவாள், கத்திகளை வாங்குபவர்கள் காவல்துறையினரின் கண்காணிப்பு வளைத்துக்குள் வந்துவிடுவார்கள்.

Follow us on :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *