தென்காசி மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்த எஸ்.பாலு, முழுநேர மக்கள் சேவையில் ஈடுபட அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.
எஸ்.பாலு
பரமக்குடியைச் சேர்ந்தவர் முனைவர் எஸ்.பாலு. சட்டம் மற்றும் பி.ஹெச்டி (திராவிட இயக்கச் சிந்தனை) முடித்த இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பதிவுத்துறையில் பணியாற்றி வந்தார். சார் – பதிவாளராக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பணியாற்றிய எஸ்.பாலு, கடந்த 2019-ல் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றார்.

கோயில் நிலங்கள்
சென்னை வில்லிவாக்கத்தில் பணியாற்றிய இவர், தென்காசி மாவட்ட பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டத்தில் பதிவாளராக பொறுப்பேற்றதும் அந்த மாவட்டக்குட்பட்ட கோயில் நிலங்கள் குறித்த விவரங்களை சார் –பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வெளியிட நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பதிவுத்துறையில் எஸ்.பாலு, பணியாற்றிய காலக்கட்டத்தில், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தார். சுப்பிரமணியம் என்ற அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளைச் செய்து வருகிறார்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு வேலைக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். அதன்மூலம் ஏராளமானவர்கள் இன்று அரசு பணிகளில் உள்ளனர். அதோடு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயங்களில் மக்களை நேரில் சந்தித்து பல நலத்திட்ட உதவிகளை செய்தவர் எஸ்.பாலு.

இந்தநிலையில் இனிமேல் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்த மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு, தன்னுடைய மாவட்ட பதிவாளர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார்.
அதற்காக அவர் அரசிடம் விண்ணப்பித்தார். அவரின் விண்ணப்பத்தை ஏற்ப பதிவுத்துறை தலைவர், இந்த மாதம் அவரை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இதையடுத்து எஸ்.பாலு, தி.மு.க சார்பில் பரமக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். பரமக்குடி தொகுதியை பொறுத்தவரை பாலுவுக்கு அறிமுகம் தேவையில்லை என்றே சொல்ல வேண்டும்.
மேலும் சமூக சேவையில் ஈடுபட்டு வந்த பாலுவுக்கு பரமக்குடியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

களநிலவரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதி பரமக்குடி. இந்தத்தொகுதியில் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். அடுத்தபடியாக நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள்தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்.
பெரியளவில் தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய தொழில்கள் இந்தத் தொகுதியில் இல்லை. அதை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
இந்தத் தொகுதியில் 2011, 2016, 2019 (இடைத்தேர்தல்) ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க வெற்றி பெற்றியிருக்கிறது. 1977-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி வாகைச் சூடியுள்ளது. 1996-ம் ஆண்டு தி.மு.க வெற்றிபெற்றது. 2001, 2006 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் இன்றைய அரசியல் களநிலவரம் மாறியிருக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ தீசைவீரன், இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த எஸ்.சம்பத்குமார், முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு ஆகியோர் சீட் கேட்கின்றனர். இதில் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்த எஸ்.பாலுவுக்கு தொகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடையே நல்ல பெயர் இருப்பதால் அவருக்கு இந்தத் தடவை சீட் கிடைக்கும் என்ற பேச்சு பரமக்குடி தொகுதி முழுவதும் பரவலாக கேட்கிறது. இந்தத் தகவல் கட்சித் தலைமைக்கும் தி.மு.கவின் ஐபேக்ஸ் சர்வே மூலமாகவும் சென்றிருக்கிறது.