தீவிரவாதி.. பகலில் டாக்டர்.. இரவில்…

பகலில் டாக்டர், இரவில் தீவிரவாதி என இரட்டை வேடத்தில் நாடகமாடிய பெங்களூரு டாக்டரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் அப்துர் ரஹ்மான் ( வயது 28).

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் என்ஐஏ அதிகாரிகல் கடந்த திங்கள் கிழமை இரவு அவரை கைது செய்தனர். இதுகுறித்து என்ஐஏ செய்தி தொடர்பாளர் சோனியா நரங் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் விரிவான விளக்கம் அளித்தார்.

அடுத்தடுத்து கைது

“டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள ஜாமியா நகரை சேர்ந்த ஜஹான்சயிப் ஷமி வாணி. அவரது மனைவி ஹினா பஷீர் பீக்கை கைது செய்தனர். காஷ்மீரைச் சேர்ந்த அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தெற்காசிய கிளை அமைப்பான ஐஎஸ்கேபி-வுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஜஹான்சயிப் ஷமி வாணி அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் புனேவில் வசித்த ஷாதியா அன்வர் ஷேக், நபீல் சித்திக் காத்ரி கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் பெங்களூருவில் டாக்டராக பணியாற்றிய அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்கேபி அமைப்புகளுடன் இவர் நேரடி தொடர்பில் இருந்துள்ளார்.

டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகம். தீவிரவாதி அப்துர் ரஹ்மான் தொடர்பான வழக்கை இந்த புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.
டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகம். தீவிரவாதி அப்துர் ரஹ்மான் தொடர்பான வழக்கை இந்த புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.


டாக்டர் அப்துர் ரஹ்மானுக்கு சொந்தமான 3 இடங்களில் அதிகாரிகள் இரு நாட்கள் சோதனை நடத்தினர். அவரது லேப் டாப், கணினி, டிஜிட்டல் சாதனங்கள், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதில் தீவிரவாதிகள் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மெடிக்கல் ஆப்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மருத்துவ பயன்பாட்டுக்காக மெடிக்கல் ஆப் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் டாக்டர் அப்துர் ரஹ்மான் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 2014-ல் சிரியாவில் 10 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போதே அவர் தீவிரவாதி ஆக மாறிவிட்டார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மருத்துவ முகாமுக்கு சென்று தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் சோனியா நரங் தெரிவித்தார்.

மருத்துவமனை விளக்கம்

பெங்களூரு எம்எஸ் ராமையா மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில், ”கடந்த 2013- ம் ஆண்டு பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரியில் அப்துர் ரஹ்மான் எம்பிபிஸ் படித்து முடித்தார்.

அதில் நல்ல மதிப்பெண் பெற்றதால் எங்கள் கல்லூரியில் எம்எஸ் படித்துக் கொண்டே ‘டாக்டராகவும் பணியாற்றினார்.

மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே அவருக்குள்ள தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியாது” என தெரிவித்துள்ளது.

கைதான அப்துர் ரஹ்மான் பகலில் டாக்டராகவும் இரவில் தீவிரவாதியாகவும் செயல்பட்டிருப்பதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ஐ.நா. சபை தனது ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக தென்மாநிலங்களில் மறைமுகமாக செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிரம் காட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *