பியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா? – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

காதல் திருமணம் செய்து கொண்ட பியூட்டிசனான பெண் ஒருவர், தன்னுடைய கணவர் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அதற்கு கணவரும் பதிலளித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சொல்லும் தகவலின் பியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்கிறதா என்ற சந்தேகம் எழ தொடங்கியிருக்கிறது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அழகுகலை பெண் நிபுணர் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

சென்னை வண்ணாரப்பேட்டை கல்லறை பகுதியைச் சேர்ந்தவர் அஜய் சத்யாவின் சகோதரி பிரபலமான அழகு நிலையத்தின் கிளையை அம்பத்தூர் பகுதியில் நடத்தி வந்தார். இந்த சலூனில் 25,000 ரூபாய் சம்பளத்தில் 2019ம் ஆண்டு நான் வேலைக்குச் சேர்ந்தேன்.

சலூனுக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. அதனால் என்னுடைய அனுமதியில்லாமல் செல்போனை எடுத்து அஜய்சத்யா பயன்படுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அழகு நிலையத்துக்கு வரும் பெண்களை போட்டோ எடுத்திருக்கிறார்.

இதையறிந்த நான் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் வேலை செய்ய கூடாது எனக்கருதி வேலையிலிருந்து நின்றுவிடுவதாகக் கூறினேன்.

டிசம்பர் 9ம் தேதி வேலையை விட்டு செல்ல முடிவு செய்தேன். அப்போது இரவு வேலை முடிந்து அனைவரும் சென்றபிறகு தகாத முறையில் நடந்துக் கொண்டதோடு என்னுடைய செல்போனையும் உடைத்து விட்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தும் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி அஜய் என்னை புதுச்சேரிக்கு ஆட்டோவில் கடத்திச் சென்றார். அங்கு என்னை அவர் திருமணம் செய்து கொண்டார்.

பிறகு திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டோம். திருமுல்லைவாயலில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மாதம் வசித்து வந்தோம். அப்போது அஜய்க்கு பல பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் சலூனில் என்னை வேலைக்காரி போல நடத்தி வந்தார்.

அதனால் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்து விட்டு நான் ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டேன். ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து அழகு நிலையம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தேன். அப்போது வாட்ஸ்அப் மூலமாக அஜய் என்னிடம் பேசினார். நீ எங்கு இருக்கிறாய் என்னிடம் சொல் இல்லை என்றால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றுவீடியோ காலில் பேசினார்.

பின்னர் அவர், என்னை சென்னைக்கு அழைத்து வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்தார். அதன்பிறகு அம்பத்தூரில் உள்ள சலூனுக்குச் சென்றேன்.

அப்போதும் அஜய்யின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரை விட்டு பிரிந்துச் சென்றேன். இந்தச் சமயத்தில் எனக்கு போன் செய்த அஜய், புதியதாக சலூன் தொடங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று கூறி வரதட்சணையாக பணம் கேட்டார்.

மேலும் அஜய்க்கும் சலூனில் வேலைப்பார்க்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. அதுகுறித்து நான் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறேன்.

அதன்பேரில் போலீஸார் அஜய் சத்யா, இளம் பெண்ஒருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அஜய்யிடம் விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அஜய் சத்யா பதிலளிக்கையில், திருமணமான ஒரு மாதத்திலேயே கவிதா, என்னை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டார். நானும் கவிதாவும் தனிமையிலிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி அவர் என்னிடமிருந்து பணம் பறித்தார்.

அதனால்தான் கவிதா மீதும் அவளின் ஆண் நண்பர் மீதும் புகாரளித்திருக்கிறேன். அதே நேரத்தில் கவிதாவுக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் நடந்திருக்கிறது. அதை மறைத்து என்னை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் கவிதாவை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறேன் என்றார்.

கவிதாவிடம் முதல் திருமணம் குறித்து கேட்டதற்கு, என்னைப்பற்றிய முழு விவரங்கள் அஜய் சத்யாவுக்கு தெரியும். எனக்கு நடந்த முதல் திருமணத்தை சட்டப்படி ரத்து செய்தபிறகுதான் அஜய் சத்யாவை திருமணம் செய்தேன் என்று பதிலளித்தார்.

Follow us on :

Tamil Nirubar YouTube Channel : https://www.youtube.com/channel/UCUJKEellp__cXrCcVBtXMeg
Tamil Nirubar Twitter : https://twitter.com/TNirubar
Tamil Nirubar Facebook : https://www.facebook.com/tamil.nirubar.37/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *