பெண் டாக்டர் மரணத்தை தாங்க முடியாமல் 4-வது மாடியிலிருந்து குதித்த வளர்ப்பு நாய்

பெண் டாக்டர் உயிரிழந்ததைத் தாங்க முடியாத வேதனையில் அவர் வளர்த்த நாய் ஜெயா, நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சோக சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது.

ஆதரவற்ற குட்டி நாய்


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் பார்ரா -2 பகுதியில் உள்ள மாலிக்புரத்தில் குடியிருந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். இவர் அரசு மருத்துவமனையின் சுகாதார இயக்குனராக பணியாற்றி வந்தார். நாய்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது குட்டி நாய் ஒன்றை உர்சுலா ஹார்ஸ்மன் மருத்துவமனை அருகே கண்டெடுத்தார்.

அந்த குட்டி நாயின் உடல்நிலை மோசமாக இருந்தது. அதற்குரிய சிகிச்சையை அளித்த அனிதா ராஜ் சிங், அந்த நாயை வீட்டிலேயே வளர்த்து வந்தார். நாய்க்கு ஜெயா என்று பெயர் சூட்டினார்.

டாக்டர் ஜெயா

டாக்டர் உயிரிழப்பு


டாக்டர் அனிதா ராஜ் சிங்கை விட்டு பிரியாமல் அவரையே வளர்ப்பு நாய் ஜெயா சுற்றி வந்தது. இருவரும் தங்களின் பாசத்தை பரிமாறிக் கொண்டு வந்தனர்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் டாக்டர் அனிதா அவதிப்பட்டார். கடந்த புதன்கிழமை அவர் உயிரிழந்தார். அனிதாவின் சடலம் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தன்னை பாசமாக வளர்த்தடாக்டர் அனிதா உயிரற்ற நிலையில் சடலமாகப் கிடப்பதைப் பார்த்த ஜெயா கண்ணீர்விட்டது. சடலத்தை சுற்றி சுற்றி வந்தது. அனிதாவின் சடலத்தை இறுதி சடங்கு செய்ய வெளியில் கொண்டு சென்றனர்.

அப்போது ஜெயா சோகம் ததும்ப குரைத்தது. பின்னர் வீட்டின் 4-வது மாடிக்குச் சென்ற ஜெயா, அங்கிருந்து கீழே குதித்து உயிரைவிட்டது. வளர்ப்பு நாய் ஜெயா உயிரிழந்த சம்பவத்தைப் பார்த்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர். டாக்டர் அனிதாவை அடக்கம் செய்த பிறகு அவரின் குடும்பத்தினர் நாயையையும் அடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *