சென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், அறிஞர் அண்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரின் மகன் மகேஷ்வரன். இவன் பிபிஏ படித்துவிட்டு வேலை தேடிவந்தான். கடந்த 4ம்தேதி இரவு தூங்க சென்ற மகேஷ்வரனைக் காணவில்லை என அவரின் அம்மா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் மகேஷ்வரனைத் தேடிவந்தனர். இந்தநிலையில் பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தில் உள்ள கடற்கரையில் மகேஷ்வரனின் சடலம் ஒதுங்கியது. இதுகுறித்துபட்டினம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

மகேஷ்வரன்

இந்தச் சமயத்தில் மகேஷ்வரனைக் கொலை செய்ததாக அவரின் நண்பரான ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போதை மாத்திரைகள் விற்பனையில் ஏற்பட்ட தகராறில் மகேஷ்வரனை நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் கொலை செய்த தகவல் தெரியவந்தது.

கார்த்திக்

கார்த்திக் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. மகேஷ்வரனும் கார்த்திக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீண்ட காலமாக நண்பர்களாக பழகியிருக்கின்றனர். இந்த நண்பர்கள் கூட்டத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த விக்கி, மயிலாப்பூரைச் சேர்ந்த தர்மா, மேடவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரும் உள்ளனர்.. இவர்கள் போதை மாத்திரைகளை விற்றுவந்தனர். அதற்காக ஒவ்வொருவரும் ஒரு ஏரியாவை தங்களுக்குள் பிரித்து கொண்டனர்.

இதில் மகேஷ்வரனுக்கு மேடவாக்கம், வேளச்சேரி பகுதி என ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பகுதியோடு மயிலாப்பூரிலும் மகேஷ்வரன் போதை மாத்திரைகளை விற்றிருக்கிறார். இதுகுறித்து சக நண்பர்கள் மகேஷ்வரனைக் கண்டித்தனர். அதனால் கார்த்திக், தன்னுடைய நண்பர்களோடு கஞ்சா அடித்தார். அப்போது போதையில் வீட்டிலிருந்த மகேஷ்வரனை செல்போனில் அழைத்தார்.

அங்கு வந்த மகேஷ்வரனை நண்பர்களேடு சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் மகேஷ்வரனையும் அவரின் செல்போனையும் கடலில் தூக்கிப் போட்டு விட்டு கார்த்திக், அவரின் நண்பர்கள் சென்றுவிட்டனர். மகேஷ்வரனைக் காணவில்லை என போலீஸார் தேடியதும் கார்த்திக், அவரின் நண்பர்கள் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

போதை மாத்திரை விற்பனையில் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *