தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 முதல் 10-ம் வகுப்பு வரை 10 தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக பாடம் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றன.

ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி திட்டம் எட்டாக்கனியாக உள்ளது. பெரும்பாலான ஏழை மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை. இதனால் ஆன்லைன் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை கல்வி தொலைக்காட்சி மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 10 தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாக இன்றுமுதல் பாடம் நடத்தப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் நாள்தோறும் தொலைக்காட்சி சேனல்களை பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.