வேட்பாளர்கள் குற்றப்பின்னணி குறித்து 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தலுக்கு முன்பாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களில் 3 முறை, அவர்கள் சார்ந்த கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட கடைசி 4 நாட்களுக்குள் முதல் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும்.
வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட கடைசி தேதியிலிருந்து 5 முதல் 8 வது நாளுக்குள் இரண்டாவது விளம்பரம் வெளியாக வேண்டும்.
ஒன்பதாவது நாள் முதல் பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை, அதாவது வாக்கெடுப்பு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மூன்றாவது விளம்பரம் வெளியிடப்பட வேண்டும்.
இந்த காலக்கட்டங்களில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களை பற்றி அதிக தகவல்களை அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒருவேளை போட்டியே இல்லாமல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.