புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் அருகே வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது பலத்த காற்று வீசும். தமிழகம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
“நிவர் புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்படும். புயல் கரையைக் கடக்கும்போது சேதாரம் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னையை பொறுத்தவரை 75 சதவீதம் புதைவடக் கம்பி என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது. புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்” என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.