திருத்தணியில் பேராசிரியரை காதலித்த இன்ஜினீயரிங் மாணவி மணிமேகலை எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடந்துவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நல்லாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரின் மகள் மணிமேகலை (24) இவர்.
அரக்கோணத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

தினமும் பஸ்சில் மணிமேகலை கல்லூரி சென்று வந்தார். அப்போது அதே பஸ்சில் வரும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், தாழவேடு கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமாருடன் மணிமேகலைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிமேகலை கடந்த 11.06.2020-ல் தாழவேடு கிராமத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டிற்கு மணிமேகலை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு மணிமேகலை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
மனவிரக்தியில் இருந்த மணிமேகலை 13.6.2020-ல் ஆற்றாங்கரை பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்துவருகின்றனர்.

இந்த வழக்கில் பேராசிரியர் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என மணிமேகலை குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனால் மணிமேகலை குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மணிமேகலையின் அம்மா புவனேஸ்வரி கூறுகையில், “திருத்தணி காவல் நிலையத்திலிருந்து தங்களுக்கு வேண்டப்பட்ட எஸ்ஐ ஒருவரை போன் செய்து ராஜ்குமாரின் குடும்பத்தினர் வரவழைத்தனர். அங்கு வந்த எஸ்.ஐ, வீட்டுக்குள் சென்று பேசிவிட்டு என்னையும் என் மகளையும் தலைமுடியை பிடித்து தாக்கினார்.
அப்போது அவரும் எங்களை தரக்குறைவாக பேசினார். அதனால் என் மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த மணிமேகலை மனவருத்ததில் இருந்தார். சாப்பிடாமல் இருந்தவளை சமரசப்படுத்தி சாப்பாடு கொடுத்தோம். அதன்பிறகு அன்றைய தினம் அனைவரும் தூங்கிவிட்டோம். மறுநாள், காலையில் தம்பியை பார்த்து மணிமேகலை சிரித்துள்ளார். பின்னர்தான் அவர் ஆற்றாங்கரையில் எரிந்த நிலையில் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

என் மகள் மணிமேகலை மரணத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. நான் என் மகளை பொத்தி பொத்தி வளர்த்தேன். எங்கள் வீட்டு கூண்டில் அவள் சந்தோஷமாக இருந்தாள். நான், இட்லி விற்று அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். இட்லி விற்க ஊர், ஊராக சுற்றி என் கால்கள் தேய்ந்துவிட்டது.
என் மகள் தெளிவானவள். அதனால் அவள் தவறான முடிவை எடுக்க மாட்டாள். என் மகள் மரணத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு யாருமில்லையே. காவல்துறையினர் நியாயமாக நடந்திருந்தால் என் மகள் இறந்திருக்க மாட்டாள்” என்று கண்ணீர்மல்க கூறினாள்.
இந்தச் சூழலில் மணிமேகலை எழுதிய காதல் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், `நான் ரொம்ப பீல் பண்ணிய நாள் இது. நான் அதிகம் காதலிக்கும் நபரை என்னுடைய நெருங்கிய தோழி தவறாக பேசிவிட்டாள். அதனால் அவளை நான் வெறுக்கிறேன்.
அதே நேரத்தில் நான் அதிகம் நேசிப்பவர் ராஜ்குமார். அவர் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்டில் பேராசிரியராக இருக்கிறார். செல்லம், லவ்லி பாய், சாக்லெட் பாய், க்யூட் பாய், அதனால் அவரை ரொம்பவும் காதலிக்கிறேன். நான் அவரை மறக்க மாட்டேன். ஐலவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்குமார் குடும்பத்தினரின் விளக்கத்தையும் வெளியிட தயாராக உள்ளோம்.
மணிமேகலை மரணத்தில் நீதி கிடைக்குமா….