முன்னாள் அமைச்சரின் பாதுகாவலராக இருந்த சிறப்பு எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் கேட்டு ஒட்டுமொத்த போலீஸாரும் சோகத்தில் மூழ்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்தவர் கௌதம். 59 வயதாகும் இவர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சிறப்பு உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தார். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதியினருக்கு சாய் முகிலன், சாய் சித்தார்த் என இரண்டு மகன்கள். இவர் விவிஐபி-க்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு பணியில் கௌதம் ஈடுபட்டிருந்தார். குடும்பத்தினருடன் கெளதம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் குடியிருந்தார். கடந்த சில தினங்களாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அணில் குமாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இன்று அதிகாலை கௌதமின் அறையிலிருந்து துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லலிதா, படுக்கையறைக்குச் சென்றுபார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தலையில் பாய்ந்த நிலையில் கெளதம் சடமாக பெட்டில் கிடந்தார். உடனடியாக தாழம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் கௌதம் வீட்டுக்கு வந்து விசாரித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக கௌதமின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கெளதமின் மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடன் தொல்லை இருந்ததாகவும் ஓய்வு பெற இன்னும் சில மாதங்கள் இருந்த சூழலில் விருப்ப ஓய்வுக்கு கௌதம் விண்ணப்பிருந்தாகவும் குடும்ப சூழல் காரணமாக மனவேதனையில் இருந்ததாகவும் சிறப்பு எஸ்ஐ கௌதம் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த கௌதம் வீட்டிலிருந்து துப்பாக்கியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்திருக்கின்றனர்.