கேரள தங்க கடத்தலில் முக்கிய குற்றவாளியின் பாஸ்போர்ட் முடக்கம்

கேரள தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி பைசல் பரித்தின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.


கடந்த 3-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது.
எக்ஸ்ரே பரிசோதனையில் பார்சலில் உலோகம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தூதரகத்தில் விசாரித்தபோது பேரிச்சம்பழம், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பதாக தெரிவித்தனர்.


சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு தூதரக உயரதிகாரிகளை வரவழைத்தனர். கடந்த 5-ம் தேதி அவர்கள் முன்னிலையில் பார்சல் பிரிக்கப்பட்டது. அதில் 30 கிலோ தங்கம் இருந்தத கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 13.5 கோடி ரூபாயாகும்.


இந்த தங்க கடத்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமாருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதில் ஸ்வப்னா சுரேஷ் கேரள தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அந்த துறையின் செயலாளர் சிவசங்கரனுடன் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.


விமான நிலையத்தில் தங்க பார்சல் சிக்கியதும் பார்சலை விடுவிக்க கோரி சிவசங்கரன் தரப்பில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அரசியல் நிர்பந்தம் காரணமாக வழக்கு விசாரணை கேரள போலீஸாரிடமிருந்து மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. ஸ்வப்னா சுரேஷ் சரித் குமார், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


கொச்சியை சேர்ந்த பைசல் பரித்துக்காக தங்க கடத்தலில் ஈடுபட்டதாக இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பைசல் பரித் தற்போது துபாயில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது பாஸ்போர்ட்டை என்ஐஏ அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி ஐக்கிய அரபு அமீரக அரசிடம் முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருச்சூரில் உள்ள பைசல் பரித்தின் பூர்விக வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.


இதனிடையே தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை கேரள அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *