போலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது.
சென்னை திருவான்மியூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் விசாலாட்சி.
இவர் அடையாறு பகுதி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது தோழியின் செல்போனுக்கு இணையம் மூலம் ரீசார்ஜ் செய்தார். ஆனால் ரீசார்ஜ் ஆகாமல் பணம் எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை விசாலாட்சி தொடர்பு கொண்டார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து 10 ரூபாய் மட்டும் ரீசார்ஜ் செய்தால் வங்கிக் கணக்குக்கு பணம் திரும்ப வரும் என்று கூறினார்.
இதன்படி குறிப்பிட்ட செயலியை விசாலாட்சி பதிவிறக்கம் செய்தார். ஓடிபி ரகசிய எண்ணையும் செயலியில் உள்ளீடு செய்துள்ளார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மாயமானது.
இதுகுறித்து ஆசிரியா விசாலாட்சி அடையாறு சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். 24 மணி நேரத்துக்குள் ஆசிரியை புகார் செய்ததால் அவர் இழந்த பணத்தை போலீஸார் மீட்டுக் கொடுத்தனர்.
போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “ஆசிரியை பதிவிறக்கம் செய்தது போலி செயலியாகும். இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம்” என்று தெரிவித்தனர்.