ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சேனல்கள் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் 3 மாதங்கள் ‘டிஆர்பி ரேட்டிங்’ வெளியிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எந்த சேனல்கள், எந்த நிகழ்ச்சிகளை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை தோராயமாக ஆய்வு செய்து ‘டிஆர்பி ரேட்டிங்’ (Television Rating Point) வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் டி.ஏ.எம்., ஐ.என்.டி.ஏ.எம் (Indian National Television Audicence Measurement), டி.ஏ.ஆர்.டி. (Doordarshan Audience Research Team),பி.ஏ.ஆர்.சி. ( Broadcast Audience Research Council) ஆகிய அமைப்புகள் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிட்டு வருகின்றன.
இதில் பி.ஏ.ஆர்.சி. உலகின் மிகப்பெரிய ‘டிஆர்பி ரேட்டிங்’ கணக்கிடும் அமைப்பாகும்.
டிஆர்பி கணக்கீடு
தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் ‘பீப்பிள்ஸ் மீட்டர்’ பொருத்துவது, ‘பிக்சர் மேட்சிங்’, ‘ஆடியோ வாட்டர்மார்க்’ உள்ளிட்ட நடைமுறைகளின்படி எந்த சேனல், எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்பது கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் வாரந்தோறும் ‘டிஆர்பி ரேட்டிங்’ வெளியிடப்படுகிறது.
சில ஆயிரம் பேரின் விருப்பங்களை ஆய்வு செய்து கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை எவ்வாறு கணக்கிட முடியும்.
இந்த நடைமுறைகள் துல்லியமானதாக இருக்க வாய்ப்பில்லை என்று நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனினும் இப்போதுவரை ஒரு சேனல், ஒரு நிகழ்ச்சியின் ‘டிஆர்பி ரேட்டிங்கை’ அடிப்படையாக வைத்தே விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன.
ரிபப்ளிக் டிவி மீது புகார்
இந்த பின்னணியில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிபப்ளிக் டிவி, பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய 3 சேனல்கள், ‘டிஆர்பி ரேட்டிங்’ மோசடியில் ஈடுபட்டிருப்பதாக மும்பை போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘டிஆர்பி ரேட்டிங்’ கணக்கிடப்படும் வீடுகளில் குறிப்பிட்ட சேனல்கள் எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்க மாதந்தோறும் ரூ.400 முதல் ரூ.700 வரை பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரிபப்ளிக் டிவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சிபிஐ விசாரணை கோரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.
தற்போது ‘டிஆர்பி ரேட்டிங்’ மோசடி வழக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் முன்னிலையில் 4 பேர் வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் குறிப்பிட்ட சேனல்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
டிஆர்பி ரேட்டிங் நிறுத்தம்
இதனிடையே, டி.ஆர்.பி. ரேட்டிங்கை வெளியிடும் மிகப்பெரிய அமைப்பான பி.ஏ.ஆர்.சி, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்தி சேனல்களுக்கான ‘டிஆர்பி ரேட்டிங்’ 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த காலத்தில் ‘டிஆர்பி ரேட்டிங்’ மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பேரில் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ‘டிஆர்பி ரேட்டிங்’ மோசடி குறித்து விசாரணை நடத்தலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.