வரும் 8-ம் தேதி விவசாயிகள் பந்த் நடத்துகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கல் 11-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் சார்பில் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் விவசாய சங்கங்கள் சார்பில் இன்று பாரத் பந்த் நடத்தப்படுகிறது. இந்த பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.
“டிசம்பர் 8-ம் தேதி டெல்லி முழுமையாக சீல் வைக்கப்படும். மாலை 3 மணி வரை அனைத்து வகையான போக்குவரத்தையும் அனுமதிக்கமாட்டோம். காய்கறிகள், பால் விநியோகம் கூட இருக்காது. அத்தியாவசிய தேவைகள், திருமண ஊர்வலங்களை மட்டுமே அனுமதிப்போம் ” என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வரும் 9-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
பாரத் பந்த் போராட்டத்தால் டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.