விவசாயிகளின் பந்த்.. டெல்லி ஸ்தம்பித்தது…

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று நடத்திய பந்த் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்தது. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பா பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் இன்று பந்த்   போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்காரணமாக டெல்லி ஸ்தம்பித்தது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குவங்கம், மகாராஷ்டிராவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. குஜராத்தின் 3 தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகள் நாள்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்..  இதன்காரணமாக டெல்லி, ஹரியாணாவில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. எனவே டெல்லி ராம்லீலா மைதானத்தை ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 14 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று இரவு சந்தித்துப் பேசினார். அமித் ஷாவின் வீட்டுக்கு செல்ல விவசாயிகள் மறுத்துவிட்டதால் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விருந்தினர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நாளை  6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நாளை விவசாயிகள் சந்திப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உட்பட 5 பேர் குழு ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *