வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் டிராக்டர் எரிப்பு தொடர்பாக இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
டெல்லி ‘இந்தியா கேட்’ பகுதியில் இன்று காலை 7.15 மணிக்கு ஒரு லாரியில் டிராக்டர் கொண்டு வரப்பட்டது.
அந்த டிராக்டர் சாலையில் தள்ளப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. பஞ்சாப் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.
5 பேர் கைது
சுமார் 15 முதல் 20 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் குறித்து உரக்க கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து டிராக்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
அப்போது அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு உட்பட பலரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் உத்தர பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.
பஞ்சாப், ஹரியாணா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இன்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரதாபன், வேளாண் சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள அரசு மற்றும் பஞ்சாப் அரசு சார்பிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.