விவசாயிகள்.. டெல்லி குலுங்கியது…

டெல்லியில் 3 லட்சம் விவசாயிகள் திரண்டு வருகின்றனர்.

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

3 சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர், லாரிகளில் நேற்று டெல்லி நோக்கி புறப்பட்டனர். 

இதில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள். அவர்கள் நேற்று பஞ்சாபில் இருந்து வாகனங்களில் பேரணியாக வந்தபோது, பாஜக ஆளும் ஹரியாணா மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அவர்கல் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இரண்டாம் நாளான இன்று பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா போலீஸாரின் தடுப்புகளை மீறி டெல்லியை நோக்கி முன்னேறினர். இதன்காரணமாக காலையில் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திடீர் திருப்பமாக ஹரியாணா போலீஸார், அவர்கள் கடந்து செல்ல அனுமதி வழங்கினர். மேலும் டெல்லியில் நுழையவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

டெல்லியின் திக்ரி எல்லைப் பகுதியில் விவசாய பெருமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.  

டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஈஷ் சிங்கால் கூறும்போது, “பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

டெல்லியின் புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். எனினும் சட்டம் ஒழுங்கை பேண அவர்கள்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் ” என்றார். 

போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்துக்கு விவசாயிகள் செல்லாமல் ஆங்காங்கே வாகனங்களுடன் குழுமியிருப்பதால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. டெல்லி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

வரும் டிசம்பர் 3-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கரோனா தடுப்பு, குளிர் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேசம், உத்தராகாண்டை சேர்ந்த  விவசாயிகள் டெல்லி நோக்கி வருகின்றனர். அவர்கள் நாளை டெல்லியில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிரண் குமார் கூறும்போது, ” தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, கண்ணீர் புகைக்குண்டு, கம்பி வேலி, கான்கிரீட் தடுப்புகளை தாண்டி டெல்லியில் நுழைந்துள்ளோம்.

இது வரலாற்று சிறப்புமிக்க நாள். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதுவரை டெல்லியில் முகாமிட்டிருப்போம்” என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயி ஒருவர் கூறும்போது, “நாங்கள் கரோனா வைரஸுக்கு அஞ்சவில்லை. ஆனால் போலீஸார் எங்களிடம் நடந்து கொண்ட விதம் வருத்தமளிக்கிறது.

நாங்கள் விவசாயிகள். எந்த கட்சியையும் சாராதவர்கள். இது விவசாயிகளின் போராட்டம். இதை கொச்சைப்படுத்தக்கூடாது” என்று தெரிவித்தார்.

ராஷ்டிரிய கிஷான் மகா சங்கத்தின் தலைவர்கள் கூறும்போது, “‘டெல்லியின் புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிறோம். அங்கு போராட்டம் நடத்துவதா அல்லது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி கோருவதா என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

சுமார் 3 லட்சம் விவசாயிகள் டெல்லியில் கூடுவார்கள் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் ரயில், பேருந்து, வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக வடக்கு ரயில்வே 2 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது. 5 ரயில்கள் பாதிவழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *