டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 26-ம் தேதி பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர், லாரிகளில் புறப்பட்டனர்.
பஞ்சாப் மாநில போலீஸார் டெல்லிக்கு வாகனங்களில் சென்றபோது ஹரியாணா போலீஸார் தடுத்தனர். அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. 3-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமஹம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். இதை விவசாயிகள் சங்கம் ஏற்க மறுத்து வருகின்றன. ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானங்களை ஒதுக்க வேண்டும் என்று 500 விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி போலீஸில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 3 கருப்பு சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்த சட்டங்களை வாபஸ் பெறும் வரை டெல்லியில் முகாமிட்டு போராடுவோம். ஜந்தர் மந்தர், ராம் லீலாவில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். யார் தடுத்தாலும் அங்கு செல்வோம் என்று தெரிவித்தனர்.